தமிழகத்தை விட்டு வெளியே போ..! நாளைக்கு திற... நாங்க யாருனு பாப்பே... வெடித்து சிதறிய போராட்டம்..! எச்சரித்த அன்புமணி ராமதாஸ்..!
என்.எல்.சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பெரும் கலவரம் வெடித்தது... இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...
கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் அறுவடையை எதிர்நோக்கி காத்திருந்த நெற்பயிர்கள் உரு தெரியாமல் அழித்து கால்வாய் வெட்டும் பணியைத் துவங்கியது என்.எல்.சி நிர்வாகம்...
2 நாட்களாக ஊர்மக்கள் கொதித்துப் போயிருக்க 2வது சுரங்க விரிவாக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டன...
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று என்.எல்.சி முகப்பு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
பாமகவினர் போராட்டம் நடத்த வருவது தெரிந்த உடனே நெய்வேலியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்..
போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், நாளை மீண்டும் பணிகள் துவங்கப்பட்டால் மாவட்டம் தழுவிய சாலை மறியல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்...
போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே போலீசாருக்கும் பாமக கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...
கண்டன ஆர்ப்பாட்டம் முடிவடைந்த நிலையில் முற்றுகை போராட்டம் தொடர பற்றிக் கொண்டது பதற்றம்... போலீசார் தடுப்பையும் மீறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்எல்சி வாயில் நோக்கி சென்றார்... பாமகவினர் இரும்பு தடுப்பு கம்பிகளை உடைத்து என்எல்சிக்குள் நுழைய முயன்றனர். போலீசாரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படவே, வாகனத்தை வழிமறித்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் பாமகவினர்...
காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டும் கூட, அன்புமணி ராமதாஸ், "விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்துங்கள்" என்று கண்டனக் குரலெழுப்பினார்...
அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது... தடியடி நடத்தி... தண்ணீரைப் பீய்ச்சி அடித்து... கண்ணீர் புகை குண்டுகளை வீசி... போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்...
தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் நடத்திய பாமகவினர், அடுத்தடுத்து காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவியது...
10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்... காயம் அடைந்த காவலர்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்...
தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நெய்வேலி ஆர்ச் கேட்டில் உள்ள அனைத்து கடைகளும் கலவரத்தால் உடனடியாக மூடப்பட்டன...
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நெய்வேலி முக்கிய கடைவீதிகளில் யாரும் கூடாதவாறு கண்காணித்தனர்...
ஒருவழியாக கலவரம் சற்று ஓய்ந்த நிலையில், தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்...
அமைதியாகத் துவங்கிய ஆர்ப்பாட்டம் நேரம் செல்லச் செல்ல பெரும் கலவரமாக வெடித்ததால் போராட்டக்களம் போர்க்களமாக மாறியது...