"எங்க சார் எங்களை விட்டு போக கூடாது.!"ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றதை ஏற்க மறுத்து, மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பெற்றோரும் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் தமிழ்மணி. கடந்த 2016ஆம் ஆண்டு எட்டு மாணவர்கள் மட்டுமே இந்தப் பள்ளியில் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியர் தமிழ்மணியின் முயற்சியால், தற்போது 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், விளையாட்டு, ஓவியம் என பிற துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதோடு, ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் படிக்க தலைமை ஆசிரியர் தமிழ் மணி காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில், செங்குட்டை அரசு தொடக்கப்பள்ளிக்கு தமிழ்மணி பணியிட மாறுதல் பெற்றதை அறிந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்மணி தலைமை ஆசிரியராக மீண்டும் வந்தால் மட்டுமே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் எனவும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது, அங்கு வந்த தலைமை ஆசிரியர் தமிழ்மணி, மாணவ, மாணவிகள் அழுவதை கண்டு, தானும் கண் கலங்கினார்.