விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு... உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு
மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் மாசுபாடு ஏற்பட்டு, உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்வதற்கு அனுமதி இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள நிலையில், மதுரையில் களிமண் சிலைகளையே செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து வியாழக்கிழமை இன்று பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.