வள்ளலார் சத்தியஞான சபை - கலெக்டருக்கு பறந்த உத்தரவு

Update: 2024-08-23 09:23 GMT

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண, சிறப்பு குழுவை அமைக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வள்ளலார் சர்வதேச மைய வழக்கு விசாரணையில், சத்திய ஞானசபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு இடம் வழிபாட்டு இடம் என்பதால், அங்கு கட்டுமானம் மேற்கொள்ளக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்து தருவது மாநில அரசின் கடமை, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு மீதுதான் குறை சொல்வார்கள் என்றனர். கோவிலுக்கு பக்தர்கள் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த நிலையில், அரசு தரப்பில் 71 ஏக்கர் மட்டுமே இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது 1938-ல் கோயிலை அறநிலையத்துறை எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது எனவும் 27 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் தூண்டுதலில்தான் கட்டுமானத்திற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சத்திய ஞானசபை மீது அக்கறை உள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த பட்டியலை தெரிவிக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்