வங்கிகளுக்கான வழக்கறிஞர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விவகாரம்...உயர்நீதிமன்றம் அதிரடி
அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கான வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து யூகோ வங்கி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழில் முறையில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையில், முதலாளி - தொழிலாளி உறவு இல்லை என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பணி நியமனமும் இல்லை என்பதால் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அரசியல் சட்டமோ, பிற சட்டங்களோ கட்டாயப்படுத்தவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வங்கிகளுக்கான வழக்கறிஞர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.