தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் உற்பத்தி, பகிர்மானம், கொள்முதல் ஆகியவற்றுக்கு கட்டணம் நிர்ணயித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2017 முதல் 2023 வரை வசூலிக்கப்பட்ட இந்த கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியாக 6 கோடியே 97 லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாயை செலுத்தும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குனர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஆணையம் விதிக்கும் அபராதங்கள், கட்டணங்கள் அனைத்தும் அரசுக்கு செலுத்தப்படுவதால் அதற்கு வரி விதிக்க முடியாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குனர் பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், அந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 1 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.