டீசலும், பெட்ரோலும் தேவையில்லை..அரசு பேருந்துகளில் புதிய அறிமுகம்..சத்தமே இல்லாமல் ஓடப்போகும் பஸ்கள்
தமிழக போக்குவரத்து துறையின் சார்பில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, முதன்முறையாக LNG , CNG இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
தமிழகத்தில், 1.76 கோடி பயணிகள் பயன்பெறும் வகையில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 20 ஆயிரம் டீசல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
டீசல் பேருந்துகளால், போக்குவரத்து துறை செலவினங்களில் 27 சதவீதம் எரிபொருளுக்கு மட்டுமே செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் டீசல் வாகனங்களால், காற்று மாசு அதிகரிக்கிறது என்பது பல நாள் பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் செலவை குறைப்பது மட்டுமன்றி, காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை மேம்படுத்தும் வகையில் டீசல் பேருந்தை மறுசீரமைப்பு செய்து, இயற்கை எரிவாயுவான CNG மற்றும் LNG வகை பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவை பயன்படுத்துவதால், பேருந்தில் இருந்து கரும்புகை வெளியேறுவது இனி இருக்காது..
அத்துடன் டீசலை விட எரிவாயு குறைந்த விலையில் கிடைப்பதால், போக்குவரத்து துறைக்கு 7 முதல் 20 சதவீதம் வரையில் செலவு குறைவதாக போக்குவரத்து துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் பேருந்தில் டீசல் டேங்கிற்கு பதிலாக இயற்கை எரிவாயுவுக்கான டேங்க் அமைக்கப்பட்டு மறு சீரமைக்கப்பட்டு அதன் சேவையும் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகங்கள், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றில் சுமார் 6 இயற்கை எரிவாயு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை நிரப்பிட இந்தியன் ஆயில் நிறுவனம், உதவியுடன் எரிபொருள் நிரப்ப நிலையங்கள் அமைக்கப்பட்டு இயற்கை எரிவாயு பேருந்துகளில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் நாட்களில், டீசல் பேருந்துகளுக்கு பதிலாக படிப்படியாக, இயற்கை எரிபொருளால் இயங்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பேருந்துகளின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் வருங்காலங்களில் போக்குவரத்து துறைக்கு ஏற்படும் நஷ்ட விகிதம் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ....
டீசலை காட்டிலும் கூடுதல் மைலேஜ்,குறைவான வாகனப் புகையும் , வெப்பமும் ஏற்படுவதால், பேருந்துகளை இயக்க சிரமம் இல்லையென்றும் கார் இயக்குவது போல் உள்ளதாகவும் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து துறையின் இந்த முன்னெடுப்புக்கு, ஓட்டுநர்கள், பயணிகள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் நல ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்....