பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பக்தர்களிடம் போலி நுழைவுச் சீட்டு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் முதல் 14 வாரங்கள் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அதன்படி, நேற்று 5-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, பக்தர் ஒருவர் கொண்டு வந்த சிறப்பு நுழைவுச் சீட்டை கோயில் ஊழியர்கள் சோதனை செய்தனர். அந்த சீட்டு கோயில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்த நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோயிலில் விரைவாக தரிசனம் செய்வதற்காக, முன்னாள் ஒப்பந்த ஊழியர் அருண்பாண்டியன் என்பவர் அந்த சீட்டை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.