விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்...
இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் கருப்பசாமியிடம் கேட்கலாம்...
சாத்தூர் அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ராஜா (49), இவர் கோயம்புத்தூரில் சொந்த மாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு மெர்லின் (44) என்ற மனைவியும் ரோஷினி (15), ரோஹித் (13) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ரிச்சர்ட் ராஜா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ரிச்சர்ட் ராஜா சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்வதற்காக ரிச்சர்ட் ராஜா தனது சகோதரர் ஜான்சன் (56) மற்றும் தன்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் தனது நானோ காரில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நல்லி சத்திரம் அருகே சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பாலத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரிச்சர்ட் மகன் ரோகித் (13) உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கோவில்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது ரிச்சர்ட் மனைவி மெர்லின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் ரிச்சர்ட் மற்றும் மகள் ரோஷினி ஆகியோரை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த நிலையில் திருநெல்வேலி மருத்துவமனையில் ரோஷினி உயிரிழந்தார். '
மேலும் படுகாயம் அடைந்த ரிச்சர்ட் மற்றும் ஜான்சன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த ரோஹித்தின் உடல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நல்லிச்சத்திரம் உள்ள அருகில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பழைய பாலத்தை விரிவாக்கம் செய்யாமல் அப்படியே சாலை போடப்பட்டு உள்ளதாகவும் இதனால் அங்கு அடிக்கடி ஏராளமான விபத்துக்கள் நடந்து வருவதாகவும் அருகில் உள்ள கிராமத்தினர் தெரிவித்து வருகின்றனர் இதனை விரிவாக்கம் செய்து புதிய பாலம் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.