பெண்ணாக மாற்றப்பட்ட ஆண்.. 1 நொடியில் மாறிய ரூ.4 கோடி சொத்து.. சந்தி சிரிக்க வைத்த `தில்லான’ பாட்டி

Update: 2023-11-22 10:07 GMT

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் 88 வயதான மூதாட்டி லைசா ஜோஸ்பின். இவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் கொன்னூர் கிராமத்தில் 3 ஆயிரத்து 544 சதுர அடியில், காலி வீட்டு மனை ஒன்று உள்ளது.

இந்த மனையானது, ஜோஸ்பினின் தந்தையான வேளாங்கண்ணி என்பவரால், கடந்த 1965-ஆம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளார்.

கடந்த 1979-ஆம் ஆண்டு வேளாங்கண்ணி உயிரிழக்கவே , 4 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தை, லைசா ஜோஸ்பின் பராமரித்து வந்துள்ளார்.

விவகாரம் இப்படி இருக்க, ஜோஸ்பினுக்கு செல்போனில் வந்த கால் ஒன்று, அவரை திக்குமுக்காட வைத்தது.

நிலத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டுள்ள சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை அபகரிக்க சிலர் ஈடுபடுவதாக, அங்கிருக்கும் ஒரு நபர் தகவலைக் கூற, அதிர்ந்து போயுள்ளார் மூதாட்டி ஜோஸ்பின்...

இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் ஜோஸ்பின் தரப்பில் புகார் அளிக்க, நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து போலீசார் விசாரணையும் நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த மோசடி கும்பல், போலியான ஆவணங்களை காட்டி நிலத்திற்கு உரிமை கொண்டாடவே, விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆனால், ஜோஸ்பின் மற்றும் அவரது மகனான செல்வராஜ் ஆகியோர், இதுகுறித்து விசாரணை செய்ததில், நிலத்தை அபகரிக்க மோசடி கும்பல் செய்திருக்கும் உல்டா வேலைகள் அம்பலமாகியுள்ளது.

அதாவது, அந்த நிலத்தின் ஆவணங்கள் அனைத்தும் ஜோஸ்பினின் மறைந்த தந்தையான வேளாங்கண்ணி பெயரில் உள்ளது.

இதனை அறிந்த அந்த கும்பல், வேளாங்கண்ணி என்ற பெயரை, பெண்ணின் பெயர் என நினைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பதுதான், அவர்களை தற்போது சிக்க வைத்துள்ளது.

அந்த நிலத்தை அபகரித்து பட்டா வாங்குவதற்காக விண்ணப்பித்தபோது, அயனாவரம் துணை தாசில்தார் மற்றும் கொன்னூர் சார்பதிவாளர் ஆகியோர், இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது.

தனது தந்தை பெயர் கொண்ட வேளாங்கண்ணி என்ற ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணின் பெயரில் பட்டா வாங்கியுள்ளது மோசடி கும்பல்...

உண்மைகளை கண்டறிந்த நிலையில், போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய பாபு, குருசாமி உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை காவல் ஆணையாளரிடம் ஜோஸ்பின் புகார் அளித்தார். அதன் பேரில் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின...

1965 ஆம் ஆண்டு போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத ஆவணங்கள் உடைய நிலத்தை குறிவைத்து, இந்த மோசடி கும்பல் நில அபகரிப்பு வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஏற்றார்போல், அதே வயதில் உள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோரை, ஆந்திராவில் இருந்து காசு கொடுத்து வரவழைத்து, ஆள் மாறாட்டம் செய்ததும் அம்பலமாகியுள்ளது.

விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்