தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி.யிடம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, அப்போதய மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் ஐ.ஜி.யிடம் விசாரணை நடத்த உள்ளதாக, விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆனையத்தின் விசாரணைத்தின் 40-ம் கட்ட விசாரணை கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் சார்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக ஆனையத்தின் வழக்கறிஞர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை 938 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வழக்கறிஞர்கள், 22 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறினர். அடுத்தகட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போராட்டத்தின்போது பணியில் இருந்த ஐ.ஜி., கலெக்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் விசாரணைக்கு அரசு தரப்பு மற்றும் சம்மன் தாரர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஆணையத்தின் வழக்கறிஞர்கள் கூறினர்.