கொடநாடு வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-03 15:04 GMT
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜ்ஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீஷன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டது.ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் என்ன என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், 9 பேரையும் விசாரிக்க வேண்டிய காரணங்களை மனுவில் தெரிவிக்கவில்லை எனவும், அந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டார்.மேலும், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags:    

மேலும் செய்திகள்