அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக நடந்து வந்த கலையரசன் தலைமையிலான விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக நடந்து வந்த கலையரசன் தலைமையிலான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா, 280 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது . இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் சூரப்பா மீதான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.கலையரசன் குழுவினர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். இறுதியாக சூரப்பாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு கலையரசன் குழுவினர் நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு சூரப்பாவும் விரிவாக பதில் அளித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் 8 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் நூற்றுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை கலையரசன் முதல்வரிடம் சமர்ப்பிப்பார் என்று தகவல்வெளியாகியுள்ளன.
சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும், இதற்கான சான்றுகளும் கிடைத்திருப்பதாகவும் ஏற்கனவே விசாரணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனவே அறிக்கை சமர்ப்பித்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது