போலி ஆவணங்களை உருவாக்கி நடிகர் சூரியிடம் மோசடி - நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி குற்றச்சாட்டு

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட முன்னான் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2020-10-09 07:35 GMT
நடிகர் விஷ்ணு விஷாலுடன் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிகர் சூரி நடித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய தந்தையான அப்போதைய டிஜிபி ரமேஷ் குடவாலாவை சூரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஷ்ணு விஷால். இதனிடையே நிலம் வாங்க விரும்பிய சூரிக்கு, சிறுசேரியில் உள்ள நிலத்தை வாங்கித் தருவதாக கூறிய ரமேஷ் குடவாலா, இதற்காக சூரியிடம் 3 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். ரமேஷ் குடவாலா தயாரிப்பில் தான் நடித்த படத்திற்கான சம்பளத்தில் 40 லட்ச ரூபாய் ஏற்கனவே உள்ள நிலையில் கூடுதலாக பணத்தை கொடுத்துள்ளார் சூரி. ஆனால் அந்த நிலத்தின் மதிப்பை கூடுதலாக காட்டி போலி ஆவணங்களை தயார் செய்து அதை சூரிக்கு விற்றிருக்கிறார் ரமேஷ் குடவாலா. ஆனால் அந்த சொத்து வில்லங்கமானது என தெரியவரவே, அதை மீண்டும் அவரிடமே ஒப்படைத்த போதிலும் பணத்தை திருப்பி தராமல் இருக்கவே, காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார் சூரி. ஆனால் முன்னாள் டிஜிபி என்பதால் ரமேஷ் குடவாலா மீது புகார் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே 40 லட்ச ரூபாய் பணம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்தார். இதன்பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்