100 சதவிகித தேர்ச்சி விவகாரம் : 9-ம் வகுப்பிலேயே வடிகட்டும் நடைமுறைக்கு கண்டனம் - தங்கம் தென்னரசு அறிக்கை
10-ம் வகுப்பில்,100 சதவிகிதம் தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக, மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதை ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது என்று, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 9-ம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை, பத்தாம் வகுப்பு சேர்த்து, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளைக் எழுத அனுமதிப்பதாக கூறியுள்ளார். ஆனால், பொதுத்தேர்வு எழுத பெயர் பட்டியலை இறுதி செய்து துறைக்கு அனுப்பும் போது மட்டும், இந்த மாணவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதாக தெரிவித்துள்ளார். அவர்களை தனித்தேர்வர்களாக பதிவு செய்யவைத்து, உடனடித் தேர்வுக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். ஏதுமறியாத பெற்றோர்களை அழைத்து இந்த மாணவர்களுக்குப் மாற்றுச் சான்றிதழும் கொடுத்து துரத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு பல பள்ளிகளில் நடக்கும் இந்த கொடுமையை நீக்கி, மாணவர்களின் நலனை காக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.