ரஜினி அரசியலின் தாரக மந்திரம் - தமிழக அரசியலில் புதிய கண்ணோட்டம்
கட்சி தலைமை வேறு, ஆட்சி தலைமை வேறு என்ற நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் தாரக மந்திரத்தை இந்தியாவில் எங்கெல்லாம் ஏற்கனவே பின்பற்றி உள்ளார்கள் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இதுதான் இன்று அரசியல் குறித்து ரஜினி பேசிய பேச்சில், அனைத்து தரப்பினராலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது. கட்சி தலைவரே ஆட்சி தலைமையிலும் பொறுப்பேற்கும் போது திறம்பட செயல்பட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி இந்திய அரசியலில் ஏற்கனவே சில நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
இந்தியாவில் உருவான மூத்த அரசியல் கட்சியான காங்கிரஸில் இதே நிலை நிலவியுள்ளது ... அதாவது மாறி மாறி தலைவர்கள் காங்கிரஸில் இருந்த போதும்,குறிப்பிடும்படியாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டதில் அதாவது 1966 களில் காமராஜரும் 1968 களில் நிஜலிங்கப்பாவும் இந்திய தேசிய காங்கிரஸிற்கு தலைவர்களாக இருந்துள்ளனர். 1998 முதல் 2018 வரை இந்திய தேசிய காங்கிரஸிற்கு சோனியா காந்தி தலைவராக இருந்த போது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்துள்ளார்.
இதே போல் மாநில அரசியலில் மராத்தியர்களின் உரிமைக்காக போராடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கட்சியான சிவசேனாவில் ரஜினி கருந்தோடு இணைந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற போதிலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தன. இதில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோசி முதலமைச்சராக பதவியேற்ற போது, கட்சி தலைவர் பதவியில் பால் தாக்கரே நீடித்தார்.
இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது பாஜக கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா தலைமையில் ஆட்சி நடக்கிறது. ஆனால் அக்கட்சியின் தலைவராக நளின் குமார் கட்டீல் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.பரமேஸ்வரப்பா மற்றும் தினேஸ் குண்டுராவ் அடுத்தடுத்து தலைவர்களாக இருந்தனர். அக்கால கட்டங்களில் அக்கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சராக இருந்து வந்தார்.
ஐக்கிய ஐனதா தளம் கட்சி பீகாரில் ஆட்சி அமைத்த போது, நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் அக்கட்சியின் தலைவராக சரத்யாதவ் இருந்துள்ளார். பின் 2017 ஆம் ஆண்டு சரத்யாதவ் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனி கட்சியினை உருவாக்கினார்.
இவ்வாறு கட்சி தலைமையிலும் ஆட்சி தலைமையிலும் மாறி மாறி பல்வேறு கட்சிகள் செயல்பட்டுள்ளன. எனினும் ரஜினியின் இந்த அரசியல் பார்வை தமிழகத்தை பொறுத்தவரை புதிய கண்ணோட்டத்துக்கு வித்திட்டுள்ளது என்றே கூற வேண்டும். இவருடைய இந்த புதிய அரசியல் பாதைக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பது அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தெரிந்துவிடும்...