நீரில் மூழ்கி பலியாவதை தடுக்கக்கோரி பொதுநல வழக்கு நீதிபதிகள் விசாரணை
ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில், கடலில் மூழ்கி பொதுமக்கள் பலியாவதை தடுக்க திட்டம் ஒன்றை வகுக்கும்படி, தமிழக அரசுக்கும், இந்து சமய அற நிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நீர் நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2020 வரையிலான காலகட்டத்தில், 986 பேர் வரை நீரில் மூழ்கி பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராமேஸ்வரம் திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிர் இழக்கின்றனர் என்று சுட்டிக்காட்டி,இதனை தடுக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து கூட்டாக திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கின் விசாரணையை மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.