வணிக நோக்கில் கல்வி நிறுவன வளாகங்கள் : தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - ஏப்ரல் 9ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவு
கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு சென்னை லயோலா கல்லூரி கூட்ட அரங்கம் வாடகைக்கு விடப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்றமே தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரிக்க பரிந்துரைத்தார். இதனையடுத்து, மின் கட்டணம் உள்ளிட்டவற்றில் சலுகை பெறும் கல்வி நிறுவனங்கள், தங்களது வளாகத்தை வணிக
நோக்கிற்காக பயன்படுத்துவது தொடர்பாக, நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்கல்வி துறை தரப்பில், கல்லூரி வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.