கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு - பழிவாங்கும் நோக்கில் ஒருவர் அடித்து கொலை
நாகர்கோவிலில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருசடி பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் அஜி, கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தன் உறவினர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாற, அஜி கட்டையால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த அஜியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்ட அன்பு என்பவருடைய மகன் அரவிந்த், பழிவாங்கும் நோக்குடன் அஜியை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து, அரவிந்த் மற்றும் அவரது நண்பரை தேடும் போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.