பூ கடையில் ஊழியரே பல ஆண்டுகளாக திருட்டு - அருகிலேயே கடை அமைத்ததால் அதிர்ச்சி
நாகர்கோவில் அருகே தான் வேலை பார்த்த பூக்கடையில் ஊழியரே பல ஆண்டுகளாக பணத்தை திருடி அருகிலேயே ஒரு கடை அமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தில் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட இந்த காட்சி நிஜத்திலும் அரங்கேறி இருக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அசம்புரோடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் வடசேரி பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வியாபாரம் நல்லபடியாக இருந்தும், கல்லாவில் பணம் சேரவில்லை... இதனால் அவர் கடனில் மூழ்கியுள்ளார்.
அவருக்கு ஊழியர்கள் மீது சந்தேகம் வரவே, கடையில் சிசிடிவி ஒன்றை பொருத்தியுள்ளார். அப்போது தான் அவரின் வருமானம் குறைந்ததற்கான உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்தது.அவரது கடையில் வேலை பார்க்கும் ஊழியரான வீரபத்திரன் என்பவர் கல்லா பெட்டியில் இருக்கும் பணத்தை, தன்னுடைய போனில் மறைத்து வைத்து திருடியது, சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.வீரபத்திரன் சமீபத்தில் தேவேந்திரனின் கடையிலிருந்து வெளியேறி, அருகிலேயே புதிதாக ஒரு பூக்கடை ஒன்றையும் துவங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவேந்திரன், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு, வீரபத்திரன் மீது வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 15 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 3 வேளை என்று வீரபத்திரன் திருடியுள்ளதாக கூறுகிறார், தேவேந்திரனின் மகன் மணி... புகாரை ஏற்று போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீரபத்தின் திடீரென தலைமறைவாகியுள்ளார். 10 நாட்களாகியும் வீரபத்திரன் கைது செய்யப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர், பூக்கடை உரிமையாளர் தேவேந்திரன் குடும்பத்தினர்...