அரசு ஊழியரை திருமணம் செய்து கொண்ட பெண் 100 பவுன் நகைகளோடு காதலனுடன் ஓட்டம்

கன்னியாகுமரி அருகே திருமணமான 22 நாளில் இளம்பெண் 100 சவரன் நகைகளோடு தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-12-22 12:16 GMT
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அரசு ஊழியரான இவருக்கு ராஜஸ்ரீ என்ற பெண்ணுடன் கடந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 

திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில் விடுமுறை முடிந்து வேல்முருகன் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் புது மணப்பெண்ணான ராஜஸ்ரீ தன் கணவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவருக்கு வரதட்சணையாக கிடைத்த 100 சவரன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்கள் இவற்றையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார். 

அப்போது தான் ராஜஸ்ரீயின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் என்ற இளைஞர் மாயமானது குறித்து தெரிந்து இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் மாயமான சந்தோஷின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தந்தையின் இறுதி சடங்குக்கு கூட சந்தோஷ் வராத நிலையில் உறவினர் ஒருவரே அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார். இதனிடையே தன் மகளை மூளைச் சலவை செய்து சந்தோஷ் அழைத்துச் சென்றதாகவும், மகளின் நகைகளை அபகரிப்பதே சந்தோஷின் நோக்கம் என்றும் ராஜஸ்ரீயின் தந்தை ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். 

சந்தோஷால் தங்கள் மகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேருமோ என அச்சம் தெரிவித்துள்ள ராஜஸ்ரீயின் தந்தை, மகளை உடனே மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்