மேலவளவு கொலை வழக்கு விவகாரம் : விடுதலையான 13 குற்றவாளிகளுக்கு நோட்டீஸ்

மதுரை மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான 13 பேருக்கும் உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2019-11-25 08:40 GMT
மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகள் 13 பேரின் விடுதலையை எதிர்த்து, வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். 13 பேர் விடுதலைக்கான அரசாணை நகல் மற்றும் ஆவணங்களை சமர்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள், வைத்தியநாதன்,ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நோட்டீஸை கொண்டு சேர்ப்பதை மேலூர் டிஎஸ்பி உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் ஆணையிட்டனர். இந்த விவகாரத்தில், தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

இதனிடையே, மேலவளவு கொலை குற்றவாளிகள் 13 பேரை மீண்டும் சிறையில் அடைக்க வலியுறுத்தி, மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது, இரு தரப்புக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக, மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்