தோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் கொள்ளை : குடுகுடுப்பைக்காரனிடம் ஏமாந்த பட்டதாரி பெண்
கணவர் உயிருக்கு ஆபத்து எனக் கூறி, பட்டதாரி பெண்ணிடம், 10 சவரன் நகையை திருடிச் சென்ற குடுகுடுப்பைகாரனை, போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண், செபியா மேரி, என்பவர் குடுகுடுப்பைகாரனிடம், ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது, செபியா மேரியின் கணவர் பெனிராஜனின், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சிறப்பு பூஜை செய்தால், தோஷம் போகும் என்றும் குடுகுடுப்பைகாரன் தெரிவித்தார். இதற்கு குடும்பத்தினரின் நகைகளை மண் கலசத்தில் வைத்து, பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய மேரி, 10 சவரன் நகைகளை, கொடுத்துள்ளார். மறுநாள், மண் கலசத்தை திறந்து பார்த்த போது, தங்க நகைகளுக்கு பதில் கற்களே இருந்தன. இது குறித்து அதிர்ச்சியடைந்த செபியா மேரி, குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குடுகுடுப்பைகார கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.