கோவில்பட்டி : ஊர் கட்டுப்பாட்டை மீறி நிலம் வாங்கியதால் தண்டனை - 6 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
கோவில்பட்டி அருகே, ஊர்கட்டுப்பாடு என்ற பெயரில் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை கிராமத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள நற்கலைகோட்டை கிராமத்தை சேர்ந்த முத்தால்ராஜ் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு 7 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். ஏற்கனவே அந்த நிலத்தை ஊர் பயன்பாட்டிற்காக வாங்குவதற்கு பஞ்சாயத்தார் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் கட்டுப்பாட்டை மீறி அதனை வாங்கியதால் முத்தால் ராஜ் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்களை ஊரைவிட்டு பஞ்சாயத்தார் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால், அந்த கிராமத்தில் உள்ள கடைகளில் எவ்வித பொருள்களும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குழந்தைகளுக்கு பால் கூட கொடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை ஆட்டோவில் கூட ஏற்ற மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, முத்தால் ராஜ் குடும்பத்தினர், சில சமூக நல அமைப்புகளின் துணையோடு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனுவை அளித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முத்தால் ராஜ் குடும்பத்தினர் ஊர்கட்டுப்பாட்டை மீறி முடிவெடுத்ததால் அவர்கள் மீது சிறிது வருத்தம் இருந்தது உண்மைதான் எனவும் ஆனால் அவர்களை நாங்கள் ஒதுக்கி வைக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.