மாநில மொழி பத்திரிகைகளில் இந்தியாவிலேயே தினத்தந்தி நாளிதழ் தொடர்ந்து முதலிடம்
தினத்தந்தி நாளிதழ் தினமும் 2 கோடி 40 லட்சம் வாசகர்களுடன் மாநில மொழி பத்திரிகைகளில் இந்தியாவிலேயே முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தினசரி பத்திரிகைகளை எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் என்பது தொடர்பான ஆய்வு முடிவை இந்திய பத்திரிகை படிப்போர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மாநில மொழி பத்திரிகைகளில் இந்தியாவிலேயே தினத்தந்தி நாளிதழ் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. தேசிய அளவில் கடந்த முறை 5-வது இடத்தில் இருந்த தினத்தந்தி நாளிதழ் தற்போது தினசரி 2 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் வாசகர்களை பெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த முறையைவிட தினத்தந்தியின் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிக வாசகர்கள் படிக்கும் முதல் 10 பத்திரிகைகளில் தினத்தந்தி இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினத்தந்தி நாளிதழை தவிர வேறு எந்த பத்திரிகையும் முதல் 10 இடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.