கள்ளக்காதலால் ஒன்றரை வயது குழந்தை கொலை
கடலூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது கொலைப்பழி சுமத்த ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு 2 மாதங்களாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கடலூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது கொலைப்பழி சுமத்த ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு 2 மாதங்களாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டியில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த முருகன் - சிவரஞ்சனி ஆகிய தம்பதியினர் வீட்டிற்கு அதேப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன், மனைவி தைரியலட்சுமியுடன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே சென்று வந்த கமலிக்கும் நடராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதையறிந்த தைரியலட்சுமி இருவரையும் கண்டித்தாக தெரிகிறது. இதனால் இடையூறாக இருக்கும் தைரியலட்சுமியை பிரச்னையில் சிக்க வைக்க திட்டம் தீட்டிய கமலி, கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சிவரஞ்சனி வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களது ஒன்றரை வயது குழந்தையை தலையணையை கொண்டு அமுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒன்றும் தெரியாதது போல, தாய் சிவரஞ்சனியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாடகமும் ஆடி உள்ளார். ஆஸ்பத்திரியில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட, பின்னர் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக நடராஜனும் கமலியும் அடிக்கடி போனில் பேசி வந்ததை கண்ட தைரியலட்சுமி அது குறித்து கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து பயந்து போன கமலி, கிராம அதிகாரி தங்கமணியை சந்தித்து, அது குறித்து கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, கமலியை கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தைரியலட்சுமி மீது பழிபோட ஒன்றரை வயது அப்பாவி குழந்தையை கொலை செய்ததை கமலி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கமலியை கைது செய்த போலீசார், தலைமறைவாகிவிட்ட நடராஜனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது