கடற்கரையில் புதுமண தம்பதி தாக்கப்பட்ட விவகாரம் : காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை தாக்கியது அம்பலம்
சென்னை கடற்கரையில், புதுமண தம்பதியை தாக்கி நகைகள் பறித்து செல்லப்பட்ட விவகாரத்தில் மனைவியே காதலன் துணையோடு கணவனை தாக்கி கொலை செய்ய முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருமணம் ஆகி 25 நாட்கள் ஆன நிலையில், பல்லாவரத்தை சேர்ந்த கதிரவன், அனிதா தம்பதி நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு
இருவரும் கண்ணாமூச்சி விளையாடிய போது, வடிவேலு பட காமெடி போல் மர்ம நபர்களிடம் நகையை பறிகொடுத்தார் அனிதா. கண்ணாமூச்சி விளையாடிய போது அங்கு வந்த மர்ம நபர்கள், கதிரவனை கம்பியால் தாக்கிவிட்டு, அனிதா அணிந்திருந்த 12 சவரன் நகை மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்த கதிரவன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அனிதா முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மதுரையை சேர்ந்த காதலன் ஆன்டனி ஜெகன் என்பவருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது தெரியவந்தது. மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெகன் என்பவருடன் அனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. ஆனால் அனிதாவிற்கு கதிரவனுடன் திருமணம் நடைபெற்றது. எனவே கதிரவனை தீர்த்துகட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர்.
கோத்தகிரிக்கு தேனிலவு சென்ற போது, நடைபெற்ற முதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது கதிரவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனிதாவையும், ஆண்டனி ஜெகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.