கோவையில் அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் ராக்கி பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை ஆய்வு செய்தனர்... 13 வயது மதிக்கத்தக்க அந்த யானை இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாயில் பலத்த காயமடைந்த நிலையில், உணவு, தண்ணீர் அருந்த முடியாமல், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து இறக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, சின்னத்தடாகம் அருகே இருந்த யானைக்கூட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை திடீரென கீழே விழுந்து துடிதுடித்து இறந்த நிலையில், அதிகாரிகள் யானையின் உடலை ஆய்வு செய்தனர். உயிரிழப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 24 மணி நேரத்தில் 2 யானைகள் கோவை வனக்கோட்டத்தில் உயிரிழந்த சம்பவம் சூழலியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.