பா.ஜ.க.வுக்கு எதிரி என்று அ.தி.மு.க. நாடகமாடுவதாகவும், ஆனால், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண் விரோதச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதை ஆதரித்தவர்கள் இதே அடிமை அ.தி.மு.க-வினர் தான் என குற்றம் சாட்டினார். நீட் தேர்வை பா.ஜ.க திணித்தபோது அதை அனுமதித்தது இதே அடிமை அ.தி.மு.க-தான் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோது மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் ஆதரவு கொடுத்ததால் தான் அந்தச் சட்டமே நிறைவேறியதாகவும் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் நமது பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும் என்றும், தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மிகப்பெரிய பிரமாண்ட கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று நடைபெற இருப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.