மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கும் துறைகளுக்கும் புதிய நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பலருக்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் புதுமுகங்களும் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டதால் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணண் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்த நிலையில், அங்கு இன்னும் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா, புதுச்சேரிக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.