"செந்தில் பாலாஜி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சொல்லாத விஷயம்" - முதல்வர் எடுக்கும் முடிவு

Update: 2024-09-27 06:24 GMT

செந்தில் பாலாஜி தீர்ப்பில் இத கவனிச்சீங்களா"

உச்ச நீதிமன்றம் சொல்லாத விஷயம்

டெல்லியில் இருந்து வந்ததும் முதல்வர் எடுக்கும் முடிவு

ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராவாரா? அவரது வருகை திமுகவுக்கு கோவை மண்டலத்தில் வலுசேர்க்குமா? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு

471 நாட்கள் சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்...

இப்போது அரசாங்கத்திலும்... அரசியலிலும் அவருடைய பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

இதில் பிரதானமாக மீண்டும் அமைச்சராவாரா? என்ற கேள்வி இருக்கிறது. அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த பிப்ரவரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது ஜாமீனில் அவருக்கான நிபந்தனைகளை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அவர் அமைச்சராக தடையில்லை என்றார்.

டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கே போகக்கூடாது என்றது. ஆனால்... செந்தில் பாலாஜி விவகாரத்தில் அப்படி எதுவும் சொல்லவில்லை... அவர் பதவியை ஏற்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கேட்டபோது முதல்வர் முடிவு எடுப்பார் என்றே திமுக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு எதிராக வந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததும் அவரது தகுதி இழப்பு நீக்கப்பட்டது. அவர் மார்ச் மாதம் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்கு மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என தெரிவித்திருந்தார்.

இப்போது செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பியதும் அவரை செந்தில்பாலாஜி சந்திக்க உள்ளார். பிறகு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முதல்வர் முக்கிய முடிவுகளை எடுக்கிறார் எனவும் அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த அனைத்து மாற்றங்களும் அக்டோபர் முதல் வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலிலும் அவரது பணி அப்படியே தொடரும் என சொல்கிறார்கள் திமுக நிர்வாகிகள். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வேளையில், அவரது ஜாமீன் விடுதலையை கொங்கு மண்டல திமுக கொண்டாடி தீர்த்திருக்கிறது..

செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றே சொல்கிறார் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...

2021 தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது. அதிமுக கூட்டணி, அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்தும், கோவை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கோவை மாவட்ட பொறுப்பை ஏற்றார் செந்தில் பாலாஜி... தேர்தலில் வெற்றியை தட்டிச் சென்றது திமுக. நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டியில் திமுக கோவையை வென்றது.

இதில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகளில் சிறையில் இருந்தே செந்தில் பாலாஜி ஆலோசனைகளை வழங்கியதாகவும் பேசப்பட்டது. இப்போது கோவை மாவட்டத்துக்கான திமுக பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமி இருக்கிறார்.

மீண்டும் செந்தில் பாலாஜி வருகை கொங்கு மண்டல திமுகவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்குமென்ற நம்புகிறார்கள் திமுகவினர்...

Tags:    

மேலும் செய்திகள்