மகாவிஷ்ணு சர்ச்சை - ``யார் தண்டனை கொடுப்பது?'' ஆவேசமாக சீனுக்குள் வந்த சீமான்
சென்னை அசோக்நகர் பள்ளித் தலைமையாசிரியர் இடமாற்றத்தை அரசு திரும்பப்பெற வேண்டுமென, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? -
பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? என்று வினவியுள்ளார்.
ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசிக்கு வழங்கியுள்ள இடமாற்ற தண்டனையை அரசு திரும்பப்பெற வேண்டுமெனவும்,
இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது மிக கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.