ஒட்டுமொத்த அரசியல் தலைகளையும் உலுக்கி எடுத்த நெல்லை தாக்குதல்.. காவல் துறையில் கருப்பு ஆடுகளா?

Update: 2024-06-15 09:28 GMT

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதயதாட்சாயினி என்ற பெண்ணும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன்குமார் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். நேற்று கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த பெண்ணின் பெற்றோர் உட்பட 10 க்கும் மேற்பட்டோர், ஆக்ரோஷத்துடன் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்தனர். அவர்கள் போலீசார் முன்னிலையிலே அலுவலக கண்ணாடிகளை உடைத்து சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெருமாள்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பெண்களை தவறாக பேசியது உள்ளிட்ட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பெருமாள்புரம் போலீசார் பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், சகோதரர் சரவணன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில், சாதி மறுப்பு திருமணங்களுக்காக எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும் என நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஸ்ரீராம் சமூக வலைதளத்தில் அறிவித்திருப்பது மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கிடையே, மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்