தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
தனியார் ஊடகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதில் தேர்தல் பத்திரம் முக்கிய பங்காற்றியதால் எதிர்க்கட்சிகள் அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக அளவிலான இடங்களைப் பெறும் என்றும் அவர் கூறினார். பஞ்சாபில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதையே தாங்கள் விரும்புவதாகவும் கூறினார்.