- சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக ஊழல் செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
- சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக, வரும் 7 மற்றும் 17ம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த முறை பா.ஜ.க அரசு ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார். ஏழைகளுக்கு வஞ்சகத்தை தவிர காங்கிரஸ் எதையும் கொடுத்ததில்லை என்று குற்றம் சாட்டினார். சாராயம், சிமெண்ட், அரிசி என சத்தீஸ்கரை கொள்ளையடிக்கக்கூடிய வாய்ப்புகளை காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை என குற்றம் சாட்டினார். பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு இதுபோன்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார். கொள்ளையடித்த பணத்தை, காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளை நிரப்பி வருவதாகவும், 2 நாட்களுக்கு முன்பு, ராய்ப்பூரில் நடந்த ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையில் பெரும் பணக் குவியல் சிக்கியதாகவும் பிரதமர் தெரிவித்தார். பணம் கைப்பற்றப்பட்ட பிறகு, முதல்வர் ஏன் கலக்கம் அடைகிறார்? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.