மாநிலங்களவை குழு தலைவர்கள் கூட்டம் நடைபெறும் வரை, அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.மாநிலங்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தை குறைந்தபட்சம் 7 அல்லது 8 மணி நேரமாவது விவாதம் நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விவாதம் நடைபெறுவதில் சுமூக தீர்வு எட்டுவது தொடர்பாக அனைத்துக்கட்சிக் குழு தலைவர்களுக்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். அப்போது, ஆலோசனைக் கூட்டம் முடியும் வரை அவையை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். ஆனால், அவைத் தலைவர் ஏற்க மறுத்ததால், பிரதமரை அவைத் தலைவர் பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அவைத் தலைவர், யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை என்றார். அரசியல் குறித்து தனக்கு கவலை இல்லை என்றும், அரசாங்கம் குறித்தே அக்கறை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்ற நிலையில், மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.