இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகள், குறுவை சாகுபடியில் தங்களது சேமிப்பு மற்றும் உடலுழைப்பை இழந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் நிவாரணம் பெற இயலாது என்றும், இதனால் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.