மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சமஸ்கிருதத்தில் சட்டங்களை இயற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிடப்பட்டது. இதற்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சட்டங்களை கொண்டு வரும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்து இருக்க வேண்டும் எனவும் கூறினார்கள். பின்னர், புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.