மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
மதுரை வளையங்குளம் பகுதியில் வரும் 20ந்தேதி அதிமுக பொன்விழா ஆண்டு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை விமான நிலையம் பின்புறம் கிட்டத்தட்ட 65 லட்சம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடையின் பின்புறம் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வீடியோ காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் 65 ஆயிரம் சதுர அடி அளவில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் உருவங்கள் பொறித்த பிரம்மாண்டமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து கண்காட்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் வீடியோ காட்சி ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டதட்ட 20 லட்சம் தொண்டர்கள் வருகை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவருந்தும் வகையில் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்சயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.