"ராக்கெட் பார்த்ததும் நானும் சயின்டிஸ்ட் ஆகணும்-னு தோணுது" மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மாணவி
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் 7 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட், இன்று காலை 6.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
சிங்கப்பூர் இன்ஜினியரிங் நிறுவனத்தை சேர்ந்த செயற்கைக்கோளும், என்.டி.யு சிங்கப்பூர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 6 நானோ செயற்கைக்கோள்களும், புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ராக்கெட் ஏவப்பட்டதை, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்தவாறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர். சிங்கப்பூர் என்.டி.யு பல்கலைக்கழகம் சார்பில் அனுப்பப்பட்ட ஏர்காப்ஸ், வேலாக்ஸ் - ஏ. எம், ஸ்கூப் - 2 ஆகிய 3 செயற்கைக்கோள்களை, அரியலூர் ஐயப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்துள்ளார். இவர் சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், செயற்கைக்கோள்களின் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிங்கப்பூர் என்.டி.யு. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.