சபரிமலையில் அந்தரத்தில் மிதந்து செல்ல போகும் பொருட்கள்
சபரிமலையில் ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய வனத்துறை அமைச்சகம் அனுமதியை வழங்கியிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பூஜை பொருட்களையும், பிற தேவையான பொருட்களையும் டிராக்டரில் கொண்டு செல்வதில் நிர்வாகத்திற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. இதனை சரிசெய்ய பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 2.90 கிலோ மீட்டர் தொலைவு ரோப் கார் வசதியை அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. ரோப் கார் வசதியை ஏற்படுத்த வனத்துறையிடம் இருந்து ஒன்றரை ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதற்கு ஈடாக வருவாய்த்துறை நிலம் 4.53 ஏக்கரை வனத்துறைக்கு வழங்க தேவசம்போர்டு முன்வந்தது. ரோப் கார் அமைக்க 20 மரங்கள் மட்டுமே வெட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் ரோப் கார் வசதி, பொருட்களை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும், பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.