"சென்னை தி.நகரில் திருப்பதி கோயில் கட்ட ரூ.19 கோடி நன்கொடை" - தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் தகவல்
சென்னை தியாகராய நகரில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு 19 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக, திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.திருப்பதி திருமலை தேவஸ்தானம், தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவராக 3-வது முறையாக தொழிலதிபர் சேகர்ரெட்டி நியமிக்கப்பட்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் ரெட்டி,உளுந்தூர்பேட்டையில் பெருமாள் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில், 2 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தியாகராய நகரில் திருப்பதி கோயில் விரைவில் கட்டப்பட உள்ளதாகவும், இதுவரை 19 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். திருப்பதி கோயிலில் 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுத்தைகள் இருப்பிடத்தை வனத்துறையினர் தேடி வருவதாகவும் சேகர் ரெட்டி தெரிவித்தார்.