சபரிமலையில் கடந்த 39 நாட்களில் பக்தர்களின் காணிக்கை உள்ளிட்டவை மூலம் 204 கோடியே, 30 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 18 கோடி ரூபாய் வருவாய் குறைவு என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. . சபரிமலையில் கடந்த நவம்பர் மாதம் 16 தேதி நடை திறக்கப்பட்டு மகர விளக்கு மற்றும் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வரை 31 லட்சத்து 43 ஆயிரத்து 163 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மண்டல பூஜை நடைபெறும் என்றும், நாளை இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதனிடையே சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கோயிலில் இலவச WIFI திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, சன்னிதானம் நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப்புரம், ஆழி பகுதிகள், அப்பம்-அரவணா கவுண்டர்கள் மற்றும் மருத்துவமனை பகுதிகளில் WIFI வசதி செய்யப்பட்டுள்ளது.