ஆப்பிள் ஐபோன்-15 - பிரதமர் மோடி பேச்சு

Update: 2023-10-27 10:09 GMT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் ஃபோன்களை ஒட்டுமொத்த உலகமும் பயன்படுத்தி வருவது நம் அனைவருக்கும் பெருமை என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில், 7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் தற்போது புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். மிகக்குறுகிய காலத்திலேயே 100 யூனிகான் நிறுவனங்களை உருவாக்கியுள்ளதாகவும், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தியில் இந்தியாவின் வெற்றியை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தருணம் இது எனவும் தெரிவித்தார். செமி கண்டக்டர் உற்பத்தி துறையின் மேம்பாட்டிற்கு சுமார் 80 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் மொபைல் போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், ஏற்கனவே ஆப்பிள் ஐபோன்-15 இன் உற்பத்தி இந்தியாவில் துவங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்