ஆன்லைனில் பாலியல் ஆசை காட்டி மோசடி - ஆந்திர மாநிலத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

சமூக வலைத்தளங்களில் உள்ள படங்களை ஆன்லைன் பாலியல் தளத்தில் பதிவேற்றி அதைக் கொண்டு 60 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-08-19 03:29 GMT
சமூக வலைத்தளங்களில் உள்ள படங்களை ஆன்லைன் பாலியல் தளத்தில் பதிவேற்றி அதைக் கொண்டு 60 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு பதிவேற்றும் படங்களை குறிவைத்து அதை பதிவிறக்கம் செய்யும் ஒரு கும்பலை பற்றிய கதை. இதை வைத்து இவர்கள் என்ன  செய்ய போகிறார்கள் என்ற கேள்வியை அதிர்ச்சியாக மாற்றியிருக்கிறது இவர்கள் செய்த செயல். விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் ராஜ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்த நிலையில் அதில் இழப்பு ஏற்படவே நூதனமான புது தொழிலை கையில் எடுத்துள்ளார். தன் தோழியான சிந்துபைரவியுன் சேர்ந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் உள்ள அழகான பெண்களின் புகைப்படங்களை 2017 ஆம் ஆண்டு முதல் சேகரித்துள்ளார்.

அழகான பெண்களின் புகைப்படங்களை எல்லாம் ஒன்று திரட்டி அதை ஆன்லைன் பாலியல் இணைய முகவரியில் பதிவேற்றி தங்களின் செல்போன் எண்களையும் கொடுத்திருக்கிறது அந்த கும்பல். பெண்களின் புகைப்படங்களை பார்த்து 500 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பணம் கட்டியோரும் ஏராளம். பெண்களின் புகைப்படத்தை பார்த்த சபலத்தில் ஆண்கள் பலரும் அந்த கும்பலுக்கு பணத்தை வாரி இறைத்திருக்கின்றனர். இதுபோல் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் இந்த கும்பலிடம் ஏமாந்து போனது தனிக்கதை. வங்கிக் கணக்கில் பணம் வந்த உடனே செல்போனையும் ஆஃப் செய்து வைத்துவிடுவார்களாம்... கடந்த மார்ச் மாதம் என்ஆர்ஐ ஒருவர் அளித்த புகாரே இந்த மோசடி கும்பல் குறித்த தகவலை வெளியே வரச் செய்திருக்கிறது. 

கிட்டத்தட்ட இந்த கும்பல் 60 லட்ச ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி பறித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல் ஆண்களின் புகைப்படத்தை காட்டியும் பெண்களில் பலரை ஏமாற்றி வந்துள்ளது இந்த கும்பல். ஆனால் பாலியல் தேவையை தேடிச் செல்வோர் வெளியே சொல்ல தயங்குவார்கள் என்பதை ஆதாரமாக வைத்தே இந்த நூதன மோசடியை அரங்கேற்றியிருக்கிறது இந்த கும்பல். பெண் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் ஏமாந்தது யார்? இதுவரை ஏமாற்றப்பட்ட பணம் எங்கே? என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்