நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும் நெருக்கடி காலம் - ஏழை பெண்ணின் செயலை கண்டு போலீசார் ஆச்சரியம்
இயற்கைச் சீற்றம், கொள்ளை நோய் போன்ற நெருக்கடியாக காலம் நல்ல மனிதர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டும். கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த தருணத்தில் கூலித் தொழிலாளியான ஒரு பெண்ணின் செயல்பாடு பலரையும் நெகிழவைத்துள்ளது.
கடந்த 18ஆம் தேதி ஆந்திராவில் லோகமணி என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீஸ், உங்களிடம் ஒருவர் பேச விரும்புவதாக கூறினார்.
செல்போன் வீடியோ அழைப்பில் இருந்தவர் ஆந்திர மாநில டி.ஜி.பி கவுதம் சவாங் என்பது லோகமணிக்குத் தெரியாது.
கொரோனாவால் உலகமே பீதியில் இருக்கும் சூழலில் மக்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்து கொண்ட போலீஸார் நாடு முழுவதும் கடமையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக சேவையாற்றும் போலீசாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார், அந்த லோகமணி.
ஒன்றரை லிட்டர் அளவுள்ள இரண்டு பெரிய பாட்டில்களில் குளிர்பானங்களை வாங்கி சென்ற லோகமணி, சாலையோரம் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் கொடுத்தார். எளிமையான தோற்றத்தில் இருந்த அந்த பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்த போலீசார், நீங்கள் என்ன வேலை செய்கிறீர், உங்கள் சம்பளம் என்ன? என விசாரித்துள்ளனர். தினமும் கூலி வேலை செய்துவரும் தனக்கு ஒரு மாதம் 3,500 ரூபாய் சம்பாதிப்பதாக கூறியுள்ளார் லோகமணி.
ஏழையாக இருந்தாலும் சேவை மனப்பான்மையில் உயர்ந்தவராக இருக்கும் லோகமணியிடமே குளிர்பான பாட்டில்களைத் திருப்பி கொடுத்த போலீசார், அவற்றை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள் என கூறி அனுப்பிவைத்தனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவக் காட்சிகள் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.