விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2018-12-29 05:37 GMT
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த தகவலை டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது, ககன்யான் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். 

இந்த திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்திருந்தார். இதன்படி, 3 விண்வெளி வீரர்கள், 7 நாட்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு நடத்த ககன்யான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

முதல்கட்டமாக 2020ஆம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக ஆளில்லா விமானம் அனுப்பப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். 
Tags:    

மேலும் செய்திகள்