நலத்திட்ட உதவிகளை மேடையில் இருந்தே தூக்கி எறிந்த அமைச்சர்
கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், நலத்திட்ட உதவிப் பொருட்களை பயனாளர்களின் கையில் தராமல், மேடையில் இருந்தே தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம், ஹலியல் என்ற ஊரில், அரசு சார்பில் கட்டபட்டுள்ள விளையாட்டு மைதானத்தை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அம்மாநில வருவாய் துறை அமைச்சர் தேஷ்பாண்டே நேற்று திறந்து வைத்தார். அதே விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு, பல்வேறு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வேறு நிகழ்ச்சிக்கு அவசரமாக செல்ல இருந்த அமைச்சர், வீரர்களை மேடைக்கு வரவழைத்து நலத்திட்டப் பொருட்களை கொடுக்காமல், மேடையில் இருந்தே அவர்களை நோக்கி தூக்கி எறிந்தார். கர்நாடக காங்கிரஸ் அமைச்சரின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது