விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி
விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்
விளையாட்டு திருவிழா - (14.01.2019) :
வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்திய அணி
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்ட் நகரில் நாளை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், வாழ்வா சாவா என்ற நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி நாளைய போட்டியில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் தவான், கோலி, ராயுடு ஆகியோர் சொதப்பியதால், அதனை சரிக்கட்ட வேண்டிய உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் அவர்கள் களமிறங்குகின்றனர். தோனி, அரைசதம் எடுக்க அதிக பந்துகளை எடுத்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும், விக்கெட்டுகள் வீழ்ந்த தருணத்தில் தோனி கையாண்ட உத்தி சரியே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தம் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு தோனி எப்படி பதில் அளிக்கப்போகிறார் என்பது குறித்து காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முன்னணி வீரர்கள் தங்களது இடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் உள்ளனர். மேலும், இந்திய அணி பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி கொடுத்தனர். அதையும் நாளைய போட்டியில் சரிக்கட்ட வேண்டிய நெருக்கடி உள்ளது. ரிச்சர்ட்சனின் வேகப்பந்துவீச்சை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதற்கு நாளை விடை தெரியும். தொடரை வெல்ல ஆஸ்திரேலிய வீரர்களும், பதிலடி தர இந்திய வீரர்களும் போராடுவார்கள் என்பதால் நாளைய போட்டி அனல் பறக்கும்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்
முதல் சுற்றில் நடால் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நட்சத்திர வீரர் நடால் வெற்றி பெற்றார். முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் JAMES DUCKWORTH ஐ எதிர்கொண்ட ஸ்பெயின் வீரர் நடால், 6க்கு4, 6க்கு3, 7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜெர்மனி வீராங்கனை கெர்பர் வெற்றி
இதே போன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் வெற்றி பெற்றார். ஸ்லோவேனிய வீராங்கனை போலானாவை எதிர்கொண்ட அவர், 6க்கு2,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அதிரடியாக வெற்றி பெற்ற ஷரபோவா
இதே போன்று ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பிரிட்டன் வீராங்கனை ஹரியட்டை எதிர்கொண்ட ஷரபோவா 6க்கு0, 6க்கு0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றார்.
படுத்துக்கொண்டு பனிச்சறுக்கும் சாகசம்
நின்று கொண்டு விளையாடும் போட்டியை பார்த்திருப்போம்.. ஏன் அமர்ந்து கொண்டு விளையாடும் போட்டியையும் பார்த்திருப்போம்.. ஆனால் படுத்துக் கொண்டே விளையாடும் போட்டியை நீங்கள் பார்த்தது உண்டா.. ?? இதோ உங்களுக்காக..!!
மல்லாந்து படுத்துகொண்டே பனியில் அதிவேகமாக சறுக்கி குறிப்பிட்ட எல்லையை அடைவதே லுஜ் விளையாட்டு. இதன் போட்டியாளர்கள் உடம்பை நேர்த்தியாக நீட்டிகொண்டு 140 கிலோ மீட்டர் வேகம் வரை சறுக்கி கொண்டு செல்வார்கள். இந்த போட்டி, சிங்கிள், டபுள், டீம் என மூன்று வகையாக நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மனுவல் விஸ்டர் என்பவர் 154 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதே இதுவரை சாதனையாக பதிவாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஷிவா கேஷ்வன் என்பவரே ஒலிம்பிக்கில் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர். இவர் 134 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததே இதுவரை ஆசிய அளவில் அதிவேக பயணமாக சாதனையாக உள்ளது. இதே போல இவர் 49 நொடிகளில், இலக்கை அடைந்ததும் ஆசிய அளவில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்துள்ள இவர், 17 வயதில் ஒலிம்பிக் போட்டியில் கால் பதித்தார். இதன் மூலம் மிகவும் இளமையான லுஜ் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், ஏதோ Amusement park ல் வாட்டர் ஸ்கேட்டிங் சறுக்குவது போல தோன்றினாலும் இந்த போட்டி மிகவும் ஆபத்தானது. சிறிது கவனம் சிதறினாலும் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இப்போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்கு சரியான இடம் இல்லாததால் பலர் சாலைகளிலும், மலைப்பகுதிகளிலும் பயிற்சி மேற்கொள்கின்றனர். இது பல சமயங்களில் மிகவும் , உயிருக்கே ஆபத்தாக மாறி விடுகிறது. வரும் காலங்களில் லுஜ் போட்டி பயிற்சி மையங்கள் அமைத்து அதிக இந்தியர்களை போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதே வீரர் சிவா கேஷ்வன் உள்பட பல விளையாட்டு ஆர்வலர்களின் ஆவலாக உள்ளது.
Next Story