அமெரிக்க தேர்தலில் திடீர் திருப்பம் இந்திய இரத்தத்தால் மாறிய களம் - டிரம்ப்புக்கு இன்ப அதிர்ச்சி
அமெரிக்க தேர்தலில் திடீர் திருப்பம் இந்திய இரத்தத்தால் மாறிய களம் - டிரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த `நிக்கி ஹேலி'
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியிலிருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த 'நிக்கி ஹேலி' விலகியதை அடுத்து, ஜோ பைடன்- டொனால்டு டிரம்ப் ஆகியோர் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். இதுபற்றி விரிவாக பார்க்கலாம்...
அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆகும். தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை அடுத்து, வருகிற நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளே உள்ளன.
அமெரிக்க தேர்தல் முறைப்படி, அதிபராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த கட்சி உறுப்பினர்களின் ஆதரவை முதலில் பெற வேண்டும். அதற்காக மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
அதன்படி, ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது கட்சியின் ஆயிரத்து 968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஆயிரத்து 497 பிரதிநிதிகளின் ஆதரவுடன் முன்னணியில் இருப்பதால் அவர் மீண்டும் போட்டியிடுவது உறுதி ஆகிவிட்டது.
அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் கவர்னருமான நிக்கி ஹேலி, மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர்.
இதில், டிரம்ப்பின் அமைச்சரவையில் பணியாற்றிய நிக்கி ஹேலி, அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்பை நேரடியாக எதிர்த்து வந்தார். இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த சீக்கிய தம்பதியான பேராசிரியர் அஜித் சிங் ரந்தாவா- ராஜ் கவுர் ஆகியோரின் மகளான நிக்கி ஹேலி, ஜவுளி வணிகத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்.
கடந்த 2017-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, ஐ.நா. சபைக்கான 29-வது அமெரிக்க தூதராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி உள்ளிட்டோர் விலகியதால், டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹேலி இருவர் மட்டும் நேரடியாக மோதி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், குடியரசுக் கட்சியின் 1,215 பிரதிநிதிகள் ஆதரவு தேவை என்ற நிலையில், 995 பிரதிநிதிகளின் ஆதரவுடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். 89 பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிக்கி ஹேலி இரண்டாம் இடத்துடன் பின்தங்கினார்.
இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலியும் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இதனால், தற்போதையை அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால், அமெரிக்காவில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது